பகல்காமில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, காஷ்மீர் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, துயரமான சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக, நேற்று தாக்குதல் நடந்த தகவல் வெளியானதும், தன்னுடைய எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிக்கையில், ‘‘ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். நமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான செயல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.