விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அபகரிக்க முயன்றதாக பா.ஜனதா சொல்கிறது. அந்த சொத்துகளை யாரும் விற்க முடியாது, வாரிசுகளுக்கும் மாற்ற முடியாது. அவை அவர்களின் பெயரிலேயே இல்லை. பிறகு எப்படி அபகரிப்பு என்று சொல்ல முடியும்? எல்லாம் கட்டுக்கதை.
பிரதமர் மோடிக்கு அவருடைய ஆலோசகர்கள் தவறான யோசனைகளை சொல்லி வருகிறார்கள். அவரது வியூகம் எடுபடாது. விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன். ஏன் இன்னும் அழைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பணம் பறிக்கவும், அரசியல் காரணங்களுக்காகவும்தான் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைப்பதை என் கணவரிடம் விசாரணை நடந்தபோது கண்டறிந்தேன். என் கணவருக்கு மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புகிறார்கள். ‘உங்கள் தாய்க்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு ஏன் ரூ.4 லட்சம் கொடுத்தீர்கள்?” என்று சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.