முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தாரோ அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம். அதில் உயர்கல்வியை நோக்கிய ஒரு பயணத்திட்டமான நான் முதல்வன் திட்ட போட்டி தேர்வுகள் பிரிவு மூலம் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் அவர்கள் அகில இந்திய அளவில் தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ள செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 நபர்களும் நான் முதல்வன் திட்டத்தில் முழுநேரமும் தங்கியிருந்து பயிற்சி பெற்றவர்கள் என்பதும், தமிழ்வழியில் தேர்வு எழுதிய காமராஜர், சங்கர் பாண்டியராஜ் ஆகியோர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
நான் முதல்வன் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தார்களோ, அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை. இந்நேரத்தில் முதல்-அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.