மத அடையாளங்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த பிரவீன்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக வனத் துறை அமைச்சர் பொன்முடி, சென்னையில் கடந்த 5-ம் தேதி பெரியார் பெருத்தொண்டர் திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழாவில், சைவம் மற்றும் வைணவ மதக் குறியீடுகளை பெண்ணுடன் ஒப்பிட்டு அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசினார். இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய க்கோரி, மதுரை கோ.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி தனபால் விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்குப் பதிவு செய்ய வேண்டியதில்லை எனக் கூறப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.