புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-

யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.

நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தால் மற்றவர்களிடம் கலந்துரையாடும் போது பெரிய அளவில் உதவும்.

உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.