ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று காங்கிரஸ் கண்டித்துள்ளது. அத்துடன், உளவுத்துறை தோல்விகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான பகுப்பாய்வு நடத்த வேண்டியது அவசியம் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், பகல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்:
* ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு காங்கிரஸ் செயற்குழு (CWC) தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது. இதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துயரமடைந்த குடும்பங்களுக்கு காங்கிரஸ் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆழ்ந்த வேதனையின் இந்த தருணத்தில் அது அவர்களுடன் முழு மனதுடன் நிற்கிறது.
* பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான மற்றும் திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல், நமது குடியரசின் மதிப்புகள் மீதான நேரடித் தாக்குதலாகும். நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காகவே இந்துக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கடுமையான ஆத்திரமூட்டலை எதிர்கொண்டு அமைதி காக்குமாறும், துன்பங்களை எதிர்கொள்வதில் நமது கூட்டு வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துமாறும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உறுதியுடனும் ஒற்றுமையுடனும் எதிர்த்துப் போராடுவதற்கான இந்திய தேசிய காங்கிரஸின் நீண்டகால உறுதியின் அடிப்படையில், அமைதி காக்க காங்கிரஸ் செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
* இந்தியாவின் கருத்தை நிலைநிறுத்துவதற்காக சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க தன்னலமின்றி முயன்றபோது தியாகியான உள்ளூர் போனிவாலாக்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் காங்கிரஸ் செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.
* தேசத்தின் கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்த பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 22-ம் தேதி இரவு காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இந்தக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
* பகல்காம் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாட்டால் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக அறியப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் – ஒரு யூனியன் பிரதேசத்தில் – இதுபோன்ற தாக்குதலை சாத்தியமாக்கிய உளவுத்துறை தோல்விகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான பகுப்பாய்வு நடத்த வேண்டியது அவசியம். இந்தக் கேள்விகள் பரந்த பொது நலனில் எழுப்பப்பட வேண்டும். கொடூரமாக உயிர் இழந்த குடும்பங்களுக்கு உண்மையிலேயே நீதி கிடைக்க இதுவே ஒரே வழி.
* அமர்நாத் யாத்திரை விரைவில் தொடங்க உள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த வருடாந்திர பயணத்தில் பங்கேற்க உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு தேசிய முன்னுரிமையாக கருதப்பட வேண்டும். வலுவான, வெளிப்படையான மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும். யாத்ரீகர்களின் பாதுகாப்பும், சுற்றுலாவை நம்பியுள்ள ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரமும் முழு நேர்மையுடனும் தீவிரத்துடனும் பாதுகாக்கப்பட வேண்டும்.
* இந்தப் படுகொலை ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும், அதன் குடிமக்களின் பரந்த பிரிவுகளிடமிருந்தும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், ஒற்றுமை மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், கருத்து வேறுபாடு, அவநம்பிக்கை, பிரிவினை ஆகியவற்றை விதைக்க இந்த கடுமையான துயரத்தை அதிகாரப்பூர்வ மற்றும் மறைமுக சமூக ஊடக தளங்கள் மூலம் பாஜக பயன்படுத்திக் கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.