காவலர்கள் பற்றாக்குறை காரணமாக வார விடுமுறை அரசாணை அமல்படுத்தவில்லை: டிஜிபி!

தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் வார விடுமுறை அரசாணையை முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் டிஜிபி தெரிவித்துள்ளார்.

மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காவல் துறையில் பணிச்சுமை அதிகம் உள்ளதால், காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிய வேண்டியதுள்ளது. போலீஸார் விடுப்பு இல்லாமல் பணிபுரிவதால், மன உளைச்சலுக்கு உள்ளாகி, மக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு 2021-ல் அரசாணை பிறப்பித்தது. இருப்பினும் இந்த அரசாணை இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை பணிபுரிபவர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 2021ல் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பட்டுதேவானந்த் விசாரித்தார். இது தொடர்பாக டிஜிபி தாக்கல் செய்த பதில் மனுவில், “தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. காவலர்கள் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியிருப்பதால், காவலர்கள் வார விடுமுறை அரசாணையை முறையாக செயல்படுத்த முடியவில்லை. மனுதாரருக்கு முறையாக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதி, “காவலர்களுக்கு வார விடுமுறை வழங்குவதில் நடைமுறை சிக்கல் இருப்பதை, அரசாணையை பிறப்பிப்பதற்கு முன்பு கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அரசாணையை முறையாக அமல்படுத்துவதில் என்ன பிரச்சினை? விடுப்பு வழங்கப்படாததால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பணியில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் தலைமைக் காவலர்கள், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக காவலர்கள் வார விடுமுறை உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும். தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.