தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு கேபிள்டிவி சேவை போலேவே 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இதேபோல் இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிடிஆர் கூறினார்.

தற்போதைய நிலையில் மாதம் இணைய சேவை பெற 600 ரூபாய் முதல் 1200 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. அந்த சேவையும் பல்வேறு கிராமங்களுக்கு இன்று வரை கிடைக்கவில்லை.. பல கிராமங்களுக்கு இணைய சேவை அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றைக்கு இணைய சேவை என்பது செல்போன்களுக்கு கிட்டத்தட்ட எல்லா இடங்களுக்கும் (மலைப்பிரதேசம் மற்றும் போதிய வீடுகள் இல்லாத அடர்ந்த காடுகளில் உள்ள கிராமப்பகுதிகள் தவிர ) கிடைக்கிறது. ஆனால் செல்போன் சேவையை தவிர பிராட்பேண்ட் சேவை இன்னமும் நகரங்களை தாண்டி கிராமங்களை போய் சேரவில்லை.. கிராமங்களுக்கு இணைய சேவை கிடைத்தால் மிகப்பெரிய அளவில் தொழில் நுட்ப மாற்றங்கள் வரும். அப்படி ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதுவும் வெறும் 200 கட்டணத்தில் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.

இன்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அப்போது பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து அதன் மூலமாக வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.