போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்
கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் ஆண்டவரின் உடல் அவர் வசித்து வந்த சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கே அவரது உடலுக்கு நண்பகல் 12 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி தொடங்கியது. முதல் நாளில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்கள் அன்பான போப் ஆண்டவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனால் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட முதல் 8½ மணி நேரத்திலேயே 20 ஆயிரத்துக்கு அதிகமானோர் அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் அமைதியுடனும், பணிவுடனும் காத்திருந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். ஏழைகள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், பின்தங்கியவர்கள் என சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மீது மிகவும் கருணை காட்டிய போப் ஆண்டவரின் மரணம் உலகையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இது வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் எதிரொலிக்கிறது. அங்கு நிலவி வரும் மயான அமைதியே இந்த துயரத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தங்கள் கைக்குழந்தை, வயதான பெற்றோர்களை அழைத்துக்கொண்டு நாடு விட்டு நாடு வந்து போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இதைப்போல இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் என பல்வேறு நாடுகளை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வாடிகனில் குவிந்து உள்ளனர்.
புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் உடலுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படும். பின்னர் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அவரது உடலுக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட ஏராளமான உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்வார். இதற்காக ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) வாடிகன் செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.