திருச்சி- கொச்சி விமான சேவை வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை: துரை வைகோ!

திருச்சியிலிருந்து கொச்சிக்கு விமான சேவையானது வரும் மே 2 ஆம் தேதி முதல் வாரம் இருமுறை தொடங்கப்படுவதாக திருச்சி எம்பி துரை வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி டெல்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானச் சேவைகளை அதிகரிக்குமாறும், புதிதாக சில உள்நாட்டு விமான சேவைகளை வழங்குமாறும் தகுந்த தரவுகளுடன் கோரிக்கை வைத்தேன். ஏறத்தாழ இரண்டு மணிநேரங்களாகத் தொடர்ந்த இந்த சந்திப்பிற்கு பின்னர், கடந்த இரண்டு மாதங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு இதுவரை கண்டிராத அளவில் தொடர்ந்து பல புதிய உள்நாட்டு சேவைகள் குறித்த அறிவிப்புகள் வந்த வண்ணமுள்ளது.

ஏற்கனவே திருச்சி- சென்னை மற்றும் திருச்சி- மும்பை ஆகிய சேவைகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவிருக்கும் திருச்சி – ஹைதராபாத் மற்றும் திருச்சி – பெங்களூரு ஆகிய விமான சேவைகளுக்கான முன்பதிவையும் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இன்று மற்றுமொரு மகிழ்வான செய்தியாக திருச்சி – கொச்சின் வாரம் இருமுறை சேவையாக மே-2 ஆம் தேதியிலிருந்து தொடங்குவதாக அறிவிப்பு வந்துள்ளது. இச்சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இது தினசரி சேவையாக விரைவில் மாற்றப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்கள்.

எனது சந்திப்பின் போது திருச்சி – கொச்சி சேவையை வலியுறுத்தி நிறையத் தரவுகளை அளித்தேன். குறிப்பாக, கொச்சியிலிருந்து வேளாங்கண்ணி வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு, திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுமென எடுத்துரைத்தேன். அத்துடன், திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பணி நிமித்தமாகச் செல்பவர்களுக்குக் கொச்சி சேவை பேருதவியாக இருக்குமென விளக்கிக் கூறினேன். எனது கோரிக்கையை ஏற்று நேற்று தொடங்கப்பட்ட விமான சேவைக்கு மக்களிடமிருந்து மிகுந்த‌ வரவேற்புக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இச்சேவையைத் தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், திருச்சி ‍- டெல்லி விமான சேவைக்கான எனது கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியாக நம்புகின்றேன். அத்துடன், திருச்சி விமான நிலைய ஓடுதளம் (Runway) மற்றும் விமான நிலைய இதர விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான, இராணுவத்திற்குச் சொந்தமான 166.97 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதோடு, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) தமிழ்நாடு அரசுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையே கையெழுத்தானது என்ற மகிழ்வான செய்தியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அடுத்த கட்டமாக, 166.97 ஏக்கர் நிலத்திற்கு ஈடான மதிப்புக் கொண்ட இடத்தை மாநில அரசு பாதுகாப்புத் துறைக்கு வழங்க வேண்டும். அதை பாதுகாப்புத் துறை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் திருச்சி வானூர்தி நிலைய ஓடுதளமானது தமிழகத்திலேயே மிகப் பெரிய ஓடுதளமாக உருவெடுக்கும்.

திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வரும் எனக்கு இச்செய்திகள் மிகுந்த ஊக்கமளிக்கிறது. திருச்சியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.