காஷ்மீர் பகல்காமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், திடீரென அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அமித் ஷா முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை பகல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். அங்கு இயற்கை அழகைச் சுற்றிப் பார்க்கச் சென்ற அப்பாவி பொதுமக்கல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்குவதாக உள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சப்போர்ட் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக இந்தியாவில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் விசாக்களை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதாவது விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.
நேற்று டெல்லியில் உயர் அதிகாரிகளுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்தே நாடு கடத்த நடவடிக்கையை விரைவுபடுத்த அனைத்து மாநிலங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அமித் ஷா அறிவுறுத்தினார். பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அனைத்துப் பாகிஸ்தானியர்களுக்கும் விசாவை இந்தியா ரத்து செய்துள்ளது. மேலும், ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது.. மருத்துவ விசாக்களில் இந்தியா வந்துள்ளவர்களுக்குக் கூடுதலாக இரண்டு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு மேலும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தேச பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் நாட்டினருக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனக் குடிமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டு இருந்தது.
மேலும், பாகிஸ்தான் உடனான 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதே இல்லை. ஆனால், இந்த முறை அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் அதிரடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தனது நாட்டில் தீவிரவாதத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் விவசாயம், குடிநீர்த் தேவை என அனைத்திற்கும் சிந்து நீரையே நம்பி இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தியா சரியான இடத்தில் செக் வைத்துள்ளது. வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு இந்தியா மேலும் கடுமையான பதிலடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.