திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டிருந்த துவரம் பருப்பில் கலப்படம் இருந்ததை அந்த மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்து அது தொடர்பாக இரு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் பருப்பின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை குறைந்த விலைக்கும் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 30-க்கு வழங்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரேஷனில் வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பருப்புகள் அரசின் வாணிப கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகிறது. அருணாச்சலா, எஸ்.கே.எஸ், அக்ரிகோ உள்ளிட்ட 5 நிறுவனங்களிடம் இருந்து 60 ஆயிரம் டன் பருப்பை அரசு கொள்முதல் செய்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரேஷன் பொருட்கள் கிடங்கில் அந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பருப்பு மூட்டையில் உடைக்கப்பட்ட பட்டாணி கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பச்சை பட்டாணி பச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது. அதில் மஞ்சள் நிற பருப்பை இரண்டாக உடைத்து சேர்த்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்த மூட்டைகளை ஆய்வு செய்ததில் அதிலும் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரத்தில் மதுரை மண்டல அதிகாரி லியோ ராபர்ட், வாடிப்பட்டி குடோன் மேனேஜர் ஆனந்த் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அமைச்சர் சக்கரபாணியின் சொந்த மாவட்டத்திலேயே ரேஷன் பருப்பில் கலப்படம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துவரம் பருப்பில் கலப்படம் இருக்கிறதா என்பதை பார்க்க மாநிலம் முழுவதும் வாணிப கழக கிடங்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் மட்டுமல்லாமல் வாணிப கழக கிடங்குகளிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.