காலக்கெடு நிறைவு: அட்டாரி வழியாக நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்!

இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பகல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் இன்று (ஏப்.27) நிறைவடைகிறது. மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வருகின்றனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவி வந்த நிலையில், ஏப்.22 பகல்காம் தாக்குதலுக்கு பின்பு மிகவும் தீவிரமடைந்தது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, விசா ரத்து, வர்த்தகம் நிறுத்தம் என பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதில் ஒன்று ஏப். 27ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் ஒன்றாகும்.
காலக்கெடுவுக்குள் வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது புதிய குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.