தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வர முடியாது என நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.
ராஜேந்திர பாலாஜி, விஜய்யை ஒரு செல்வாக்கு மிக்க நடிகராகக் குறிப்பிட்டு, “சிவகாசிக்கு அவர் வந்தால், நானும் ஓரமாக நின்று அவரது பேச்சு, செயல்பாடுகள் எப்படி உள்ளன எனப் பார்ப்பேன். ஆனால், கூட்டத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது,” என்றார். 2011 தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சிவகாசியில் பிரச்சாரம் செய்தபோது கூடிய கூட்டத்தை கண்டு அரண்டு போனோம். அந்த தேர்தலில் 38 ஆயிரத்து 888 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தேன். நடிகர்களுக்காக கூட்டம் எம்ஜிஆர் காலத்துடன் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
எம்ஜிஆரின் அரசியல் வெற்றி தனித்துவமானது என விளக்கிய பாலாஜி, “எம்ஜிஆர் 1957 இல் அரசியலுக்கு வந்து, 1967 இல் சட்டமன்ற உறுப்பினராகி, 1977 இல் ஆட்சியைப் பிடித்து 1987-இல் மறைந்தார். 20 ஆண்டுகள் அரசியல் பயணத்தில், திரைப்படங்கள் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தி, இளைஞர்களை அரசியலில் பக்குவப்படுத்தி, பொதுத்தொண்டு செய்ய வைத்தார். அதன் பின்னரே அவர் அரசியல் அரங்கில் பெருவெற்றி பெற்றார்” என்றார். எம்ஜிஆர் போல் வெற்றி பெறுவது மற்றவர்களுக்கு சாத்தியமில்லை என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவை எதிர்ப்பது தங்களின் ஒற்றை குறிக்கோள் எனக் கூறிய பாலாஜி, “திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் இணைய எடப்பாடியார் தயாராக உள்ளார். இது அதிமுக தொண்டர்களின் விருப்பமும் ஆகும்,” என்றார். திமுக எதிர்ப்பு கொள்கையுடன் செயல்படும் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் எண்ணம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விஜய்யின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை வரவேற்பதாகக் கூறிய பாலாஜி, “விஜய் தனது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக போர்வீரர்களாக இருக்குமாறு கூறியுள்ளார். அது சரியான அணுகுமுறை,” என்றார். இருப்பினும், அதிமுகவைப் பொறுத்தவரை, தங்களது பூத் கமிட்டி நிர்வாகிகள் தளபதிகளை போன்றவர்கள். பல தேர்தல்களை சந்தித்து அனுபவம் பெற்றவர்கள் எனவும், திமுகவை தோற்கடிக்கும் வலிமை அதிமுகவுக்கு உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.