விவசாயிகள் தொழில்முனைவோராகவும் வணிகர்களாகவும் மாற வேண்டும்: ஜெகதீப் தன்கர்!

விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கில், ‘பாரதத்துக்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:-

இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 20.2 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியா உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையில் இருந்து உபரிக்கு மாறிய இந்தியாவின் பயணத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்.

இ-நாம் திட்டத்தில் 2 கோடி விவசாயிகளும், 2.5 லட்சம் வர்த்தகர்களும் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும். வேளாண் விளை பொருட்களின் சந்தை மிகப்பெரியது. மதிப்பு கூட்டுப் பொருட்கள் மூலம் தொழில் வளம் பெருகும்.

மாணவர்களின் ஆராய்ச்சி விவசாயிகளுக்கு நேரடிப் பலன் தருவதாக இருக்க வேண்டும். இதற்கு அரசு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆதரவளிக்க வேண்டும். உர மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற வேளாண் பொருட்கள் கண்காட்சியை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், வேளாண் பல்கலை. வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, பல்கலை. துணைவேந்தர் (பொறுப்பு) தமிழ்வேந்தன், டீன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.