தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்றைய தினம் மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்த நிலையில், அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இன்றைய தினம் அவர் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
நேற்றைய தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. சர்ச்சைப் பேச்சு காரணமாக பொன்முடியும், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கு காரணமாக செந்தில் பாலாஜியும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இதனால் அவர்களின் துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் தான் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அவர் அமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் ஆர் என் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர் பதவி பிரமாணம் ஏற்ற பிறகு சில நிமிடங்களில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இலாகா குறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. அதன்படி அவர் முன்பே கவனித்து வந்த பால்வளத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்படும் முன்பு அவர் பால்வளத்துறையை கவனித்து வந்த நிலையில், மீண்டும் அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.