பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ல் தீர்ப்பு!

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ந் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மே 13-ந் தேதி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.

2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. “அண்ணா அடிக்காதீங்க.. அண்ணா அடிக்காதீங்க.. கழட்டிடுறேன் அண்ணா” என கதறி கெஞ்சும் இளம் பெண்ணின் ஈனஸ்வரக் குரலையும் கூட பொருட்படுத்தாமல் காமவெறி பிடித்த கும்பல் ஒன்று சீரழித்த கொடூரத்தின் ஒரு சாட்சியம்தான் இந்த ஆடியோ. பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் அதிமுக ‘சீனியர்கள்’ வீட்டு செல்லப்பிள்ளைகளுக்கு தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவே சிபிஐ இந்த வழக்கை விசாரித்து மொத்தம் 9 பேரை கைது செய்தது.

இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இவ்வழக்கை விசாரித்து வருகிறார். இவ்வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 50 பேர் சாட்சியமளித்தனர். மேலும் 200 ஆவணங்கள், 40க்கும் அதிகமான மின்னணு ஆவணங்களும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இவ்வழக்கில் அண்மையில் அரசு தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த 9 பேரிடமும் தனித்தனியாக சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளும் இதற்காக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அளித்த பதில்களும் வீடியோ சாட்சியங்களுடன் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது. இவ்வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.