நாங்குநேரி விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகில் திருநெல்வேலி – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.27) மாலை சுமார் 5 மணியளவில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் மீது, திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்துகொண்டிருந்த கார் ஒன்று தடம் மாறி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் மேற்படி வாகனங்களில் பயணம் செய்த 16 நபர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாளைங்கோட்டை வட்டம், டக்கரம்மாள்புரம், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (68) ,மார்கரெட் மேரி (60) , ஜோபர்ட் (40) , அமுதா (35), குழந்தைகள் ஜோபினா (8), ஜோகன் (2) மற்றும் ராதாபுரம் வட்டம், கன்னங்குளத்தைச் சேர்ந்த மேல்கேஸ் (60) ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணவேனி (36), அன்பரசி (32), பிரியதர்ஷினி (23), சுபி.சந்தோஷ் (21), அட்சயாதேவி (19), பிரவீன் (10) மற்றும் அஸ்வின் (8) ஆகிய 7 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.