மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவரான ரவி மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கிராமத்தின் ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபாடு நடத்தவும், கோயிலுக்குள் செல்வோரை தடுக்கும் விதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, 22 மாதங்களுக்கு பிறகு, கடந்த 18-ம் தேதி வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு, கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கோயிலுக்குள் நாங்கள் செல்ல மாட்டோம் என்று கூறிவருகின்றனர். மேலும், வழிபாட்டுக்காக கோயிலுக்கு வந்த பட்டியலின மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவரான ரவி மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவுவதால், கடந்த 18-ம் தேதி முதல் கோயிலைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.