“தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைவிட, வட மாவட்டங்கள் டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் திருமண மண்டபம் திறப்பு விழா இன்று (ஏப்.30) நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, திருமண மண்டபத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி சித்திரை முழு நிலவு, பாமக வன்னியர் இளைஞர் பெருவிழா மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும். குறிப்பாக தம்பி, தங்கைகள் அதிகமாக பங்கேற்க வேண்டும்.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் சமூக நீதி என்பதாகும். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார். இந்தக் கோரிக்கை மூலமாக தமிழகத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு, அவரவர் சமூகத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, அரசு திட்டங்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும்.எனவே தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும்.
மேலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்கள் உள்ளது. இதில், 20 மாவட்டங்கள் மிகமிக பின் தங்கியுள்ளது. இந்த பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு தனி திட்டங்களை வகுத்து அந்த மாவட்டங்களை வளர்ச்சியடைய செய்ய வேண்டும். இதில் 15 மாவட்டங்கள், வட மாவட்டங்களாக உள்ளது. இங்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்கள் அனைத்தும் பின்தங்கி உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளின் மதுவிற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் முக்கிய கோரிக்கைகளாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.