சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே மேம்பாடு ஏற்பட்டு விடாது என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சூழலில், தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளார். எனினும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே நிலைமையை மேம்படுத்தி விடாது என கூறியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய அவர், சமூகம் பற்றி சிறந்த முறையில் புரிந்து கொள்வதற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனை வரவேற்கவே செய்கிறோம். ஆனால், பீகாரில் நாம் காண்பதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே நிலைமையை முன்னேற்றி விடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளை கொண்டு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். அப்படி செய்யும்போது மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்படும் என கூறியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் நீண்ட நாட்களாக கோரி வந்தது. அதன் தலைவர்கள், அடிக்கடி பேசும்போது இதனை வலியுறுத்தி வந்தனர். இந்த முடிவுக்கு ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்து இருக்கிறார். இது எங்களுடைய 30 ஆண்டு கால வேண்டுகோள் என குறிப்பிட்ட அவர், அரசியல் வளர்ச்சி மட்டுமின்றி, அனைத்து பொதுவுடைமைவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியிது என கூறியுள்ளார்.