சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை வரவேற்றும், முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். இதனால் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளது. பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைத்த பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுதான் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜகவை பாராட்டியும், பாஜகவுடனான கூட்டணியை வரவேற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி திமுகவை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-
தீர்மானம் 1: 2026 சட்டசபை பொதுத்தேர்தலில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளாடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கழகம் மகத்தான வெற்றியை பெறுவதற்கு அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் கூட்டணியை அமைத்தும்; திமுக என்கிற பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்றெ செய்து ‛மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்த வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெஞ்சார்ந்த பாராட்டும். நன்றியும்.
தீர்மானம் 2: 2021 சட்டசபை தேதர்லின்போது 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை த்ந்து அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் 3: நீட் ரத்து விஷயத்தில் கபட நாடகம் நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களின் வாய் ஜாலத்தை மாணவ-மாணவியரும் மக்களும் இனியும் நம்பத் தயாராக இல்லை. எனவே அடுத்தவர்கள் மீது பழிபோட்டு, போகாத ஊருக்கு வழிக்காட்டுவது போல, ஏமாற்று வேலைகளை செய்யாமல் மாணவ சமுதாயத்திடமும் , அவர்தம் பெற்றோர்களிடமும் தமிழக மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
தீர்மானம் 4: ‛நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு’ என்கிற திரைப்பட பாடல் வரிகளை போல திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் கடுங்கோபத்தை மறைக்கவே மொழிக் கொள்கை, கல்வி கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடி கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் 5: தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை தாரை வார்க்க காரணமாக இருந்துவிட்டு, அப்போதே அதை தடுக்க தவறிவிட்டு தற்போது அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்வதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது உள்ளிட்ட நாடகங்களை நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் 6: கழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த திட்டங்களை தாமதமாக செயல்படுத்தியும், நீர் மேலாண்மையை முறையாக பாதுகாக்கவும் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம். நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதியை பெற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த பிரதமருக்கு நன்றி.
தீர்மானம் 7: இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம். அதிமுக மதச்சார்பில்லாத ஒரு மக்கள் இயக்கம். ஆகவே, கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று உறுதி அளிக்கிறது.
தீர்மானம் 8: கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும், முக ஸ்டாலின் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றப்பயணம் மேற்கொண்டும், ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தீர்மானம் 9: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்ற வகையில் சொத்து வரியில் தொடங்கி, குடிநீர் வரி முதல் குப்பை வரி வரை உயர்த்தி உள்ள திமுக அரசுக்கு கண்டனம். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வையும், கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு இச்செயற்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் 10: அதிகார மமதையில் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்துகின்றன வகையில் ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பெண்களின் பாதுகாவலரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடிக்கு பாராட்டும், நன்றியும்.
தீர்மானம் 11: ‛அராஜகம் – வன்முறை’ என்றாலே திமுக; திமுக என்றோலே ‛அராஜகம் – வன்முறை’ என்று மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும், கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் வன்கொடுமை என தொடர் சமூக விரோத செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் 12: மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு, சுய விளம்பர ஆட்சியும், போட்டோ ஷூட் காட்சியும் நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் 13: காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நடந்தேறிய பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம். தீவிரவாதத்தை ஒழிக்கவும், பயங்கரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கழகம் துணை நிற்கும்.
தீர்மானம் 14: பொது எதிரியை வீழ்த்த ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றிணைவது கூட்டணி. அந்த வகையில் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்துவதற்கு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் வெற்றி கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு முழு மனதுடன் ஆதரவை அளித்து அங்கீகரிக்கிறது.
தீர்மானம் 15: அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலேயே செயல்பட்டு, ஆளுமை திறன் மிக்க பொதுச்செயலாளர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை 2026ம் ஆண்டில் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவோம் என சூளூரை ஏற்போம்.
தீர்மானம் 16: தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதாவின் அரசு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. தற்போது மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்ததை இச்செயற்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இவ்வாறு மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.