எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கடிதத்தை அவர் அரசு வழக்கறிஞருக்கு அனுப்பியுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும் பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். இவர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சட்டத் துறை ஆணையராக பணியாற்றினார். அப்போது கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்து அரசு வழக்கறிஞருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது, கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் எனக்கு மாநில அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும் என சகாயம் ஐஏஎஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த ஜகபர் அலி கொலை, நெல்லையில் நடந்த ஜாகீர் உசேன் கொலைகளை சுட்டிக் காட்டி சகாயம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டு காலமாக நடந்து வந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அப்போது திடீரென அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து கோர்ட்டுக்கு சென்ற சகாயம், தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரினார். அதன்படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் சகாயம், அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட ஆணையராக இருந்த போது தனக்கு இரு மிரட்டல்கள் வந்தன என்றும் தன்னை வெட்டி கனிம சுரங்கத்தில் வீசிவிடுவோம் என மிரட்டியதாகவும் இது குறித்து தான் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என சகாயம் தெரிவித்துள்ளார்.