படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாகிறது இந்தியா: பிரதமர் மோடி!

சர்வதேச அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாடு மும்பையில் நேற்று தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டின் முதல் வேவ்ஸ் மாநாடு வெற்றிகரமாக தொடங்கப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் கலை, படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் வேவ்ஸ் விருதுகள் வழங்கப்படும். இது உலகின் மிகச் சிறந்த விருதாக இருக்கும். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் தற்போது 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டிப் பிடிப்போம். உலகின் மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளோம். இதேபோல சர்வதேச அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்துவமான கிராமிய பாடல் இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு புராண கதைகள் உள்ளன. 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் வாழும் நமது நாட்டில் 100 கோடிக்கும் அதிகமான கதைகள் உள்ளன. இந்த கதைகளை உலகத்தோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை பொக்கிஷங்களும் நமது நாட்டில் உள்ளன. இந்த பொக்கிஷங்கள் காலத்தால் அழியாதவை. இந்த நேரத்தில் நமது இசை, கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான அடித்தளமாக வேவ்ஸ் இருக்கும். திரைப்படம், இசை, அனிமேஷன், கேமிங் துறைகளில் இந்தியர்கள் தங்களது முழுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்தியாவில் படைப்போம், உலகத்துக்காக படைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்திய திரைப்படங்கள், இசைகள் உருவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியால் திரையின் அளவு சிறிதாகி வருகிறது. ஆனால் அதன் எல்லை வானளாவிய தொலைவுக்கு விரிவடைந்து வருகிறது.

திரைப்படம், இசை, அனிமேஷன் சார்ந்த படைப்பாற்றல் பொருளாதாரம், ஆரஞ்சு பொருளாதாரம் என்றழைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ஆரஞ்சு பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்க சக்தியாக அமைந்திருக்கிறது.

சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஓடிடி தளங்களில் இந்திய படங்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதேபோல சர்வதேச அளவில் இந்திய இசையும் கோலோச்ச வேண்டும். இந்திய புராணங்கள் எப்போதும் இசை, நடனம் மூலமே தெய்வீகத்தை பரப்பி வருகின்றன. சிவனின் உடுக்கை முதல் அண்ட ஒலியாகவும் சரஸ்வதியின் வீணை ஞானத்தின் தாளமாகவும் கிருஷ்ணரின் புல்லாங்குழல் அன்பை பறைசாற்றுவதாகவும் விஷ்ணுவின் சங்கை நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டத்தின்போது உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள், ‘வைஷ்ணவ் ஜன தோ’ பாடலை பாடினர். இதன்மூலம் காந்தியடிகளின் கொள்கைகள் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டது.

21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு ஆகும். இந்த காலத்தில் நாம் அதிக அளவில் ரோபோக்களை உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் மனிதர்கள் ஒருபோதும் ரோபோக்களாக மாறிவிடக்கூடாது. படைப்பாற்றல் உலகின் மூலம் மட்டுமே மனித உணர்வுகளை போற்றிப் பாதுகாக்க முடியும்.

கடந்த 1913-ம் ஆண்டு மே 3-ம் தேதி இந்தியாவின் முதல் திரைப்படம் வெளியானது. தாதாசாகேப் பால்கே இயக்கிய அந்த திரைப்படத்தின் பெயர், ‘ராஜா ஹரிஷ்சந்திரா’ ஆகும். இப்போது உலகம் முழுவதும் இந்திய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நடிகர் ராஜ் கபூரின் திரைப்படங்கள் ரஷ்யாவில் இன்றளவும் பிரபலமாக உள்ளன. சத்யஜித்ராய் திரைப்படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோலோச்சின. தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதினை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள், இயக்குநர் ராஜமவுலியின் திரைப்படங்கள் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி பேசும்போது, “அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய பொழுதுபோக்கு துறையின் பொருளாதாரம் 3 மடங்கு அதிகரிக்கும். சுமார் 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்” என்று தெரிவித்தார்.