நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கடந்த 28-ந் தேதி அவரது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளபக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலை விரைவில் துண்டாக்கப்படும். தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத் தளத்தில் பதிவிட்டால் அதற்கு முழு பொறுப்பு சீமான்தான். அதன் விளைவு மரணம் என்று, சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே, மிரட்டல் விடுத்த சந்தோஷ் மீதும், அவரது பதிவை ‘டேக்’ செய்து பதிவிட்டுள்ள 4 நபர்கள் மீதும், அவர்கள் சார்ந்துள்ள இயக்கம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.