எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சிக்கு பின்னர், ராஜ்யசபா சீட் வழங்காவிட்டால் திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா என செய்தியாளர்கள் வைகோவிடம் கேள்வியெழுப்பினர்.
இதற்கு அவர் பதலளித்து கூறும்போது, “இந்துத்துவா சக்திகளை எதிர்ப்பதற்காகவும் திராவிட இயக்கத்தை காப்பதற்காகவும் திமுகவோடு கரம் கோர்க்கிறோம் என கட்சியில் ஒரு மனதாக முடிவெடுத்து கூட்டணியில் இணைந்தோம். இது சித்தாந்ததத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. இந்த பதவி கொடுப்பார்களா அந்த பதவி கிடைக்குமா என கணக்கு போட்டுக் கொண்டு, கூட்டணி வைக்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியில் மதிமுக தொடரும்” என்றார்.
தொடர்ந்து, “சாதிவாரி கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு முன்னாலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தப் போகிறோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த பிழைக்கும் இடமின்றி சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என வைகோ தெரிவித்தார்.