ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே தான் பகல்காம் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்ய மனுக்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுக்க உள்ளனர். இதற்கிடையே தான் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி தான் காரணம். மத்திய அரசின் அலட்சியம் தான் காரணம். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் பகல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். அதோடு மனுத்தாக்கல் செய்தவரை காட்டமாக நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
இதுதொடர்பாக நீதிபதிகள், ‛‛அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகள் பல இருக்கிறது. ஆனால் அதற்கான வழி இதுவல்ல. இனியும் இதை செய்யாதீர்கள். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எப்போது பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணையில் கைதேர்ந்த எக்ஸ்பர்ட்டாக மாறினார்கள்? நாங்கள் யாரையும் மகிழ்விக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கு செல்ல வேண்டுமோ செல்லுங்கள்” என்று காட்டமாக கூறினர்.
மேலும் நீதிபதி சூர்ய காந்த் கூறுயைில், ‛‛இது முக்கியமான நேரம். பயங்கரவாதத்தை எதிர்த்து அனைவரும் கைகோர்த்து போரிட வேண்டிய நேரம் இது. இப்படியான சூழலில் இதுபோன்ற செயல்கள் பதிலடி கொடுக்க தயாராகி வரும் நம் படை வீரர்களின் மனஉறுதியை சீர்க்குலைக்கும். இது சென்சிட்டவான பிரச்சனை. பிரச்சனையின் உணர்திறனை அறிந்து செயல்பட வேண்டும்” என்று காட்டமாக கூறினர்.
இதையடுத்து நீதி விசாரணை கோரி தாக்கல் செய்த மனக்களை வாபஸ் பெற வழக்கறிஞர்கள் அனுமதி கோரினர். இந்த வேளையில் மனுதாரர் தரப்பில், ‛‛காஷ்மீர் தாக்குதலில் 26 பேர் இறந்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பிற மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அமைச்சர்கள் தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் பாதுகாப்பு கோரி காஷ்மீர் மாணவர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்ற வாதம் வைக்கப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்க மறுத்து விட்டது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் சார்ந்த அம்சங்கள் எதுவும் மனுவில் இல்லை என உச்சநீதிமன்றம் கூறி அந்த மனுவை ஏற்க மறுத்தது.
அதோடு நீதிபதி கோடீஸ்வரர் சிங், ‛‛இதுபோன்று செய்வதற்கு இது சரியான நேரம் இல்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம் இது. இந்த மனுவை எங்களால் ஏற்க முடியாது. மாணவர்கள் தொடர்பான பிரச்சனைக்கு உயர்நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறினார்.
இதையடுத்து மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். நீதிபதிகள் அனுமதி வழங்கினர். இருப்பினும் ஜம்மு காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பு நலன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார். அவர் உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை எதிர்த்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது வாதத்தை புறம்தள்ளி உயர்நீதிமன்றத்தை நாட அனுமதி வழங்கி உத்தரவிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.