பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வந்த பிறகு, முதன்முறையாக தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்களை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து உள்ளது.
சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தர் சந்தோஷ் குமாரின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. துணைவேந்தர்களை நியமிப்பதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சட்டமானது. இந்தப் புதிய சட்டத்தின்படி 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அரசு அமைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் பதவிக்குத் தகுதியான பேராசிரியர்கள் இந்தத் தேடுதல் குழுவிடம் ஆறு வார காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை தேடுதல் குழு பரிசீலனை செய்து, தகுதியான நபர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காகவும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வாசுகி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தீனபந்து உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் குழு தலைவர், உறுப்பினர், சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் 3 பேர் என ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்முறையாக ஆளுநர் தரப்பில் பிரதிநிதி யாரும் இடம்பெறாமல் தேடுதல் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமன அதிகாரம் தமிழ்நாடு அரசின் கைகளுக்கு வந்த பிறகு, முதன்முறையாக 2 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.