தொழில் வளர்ச்சி போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து செயல்படும் திமுக அரசுக்கு தொழிலாளர்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று, மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
மே தினத்தை முன்னிட்டு, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் நினைவுத்தூணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். அதன்பின், அங்கு நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசியதாவது:-
தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே தினத்தில், உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என்று பெரியார் பெருமையுடன் குறி்ப்பிட்டுள்ளார். கடந்த 1932-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தது பெரியார்தான். சென்னை நகரம், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது. 8 மணி நேரம் வேலை எனும் உரிமைப்போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது இந்த சென்னை மாநகரத்தில்தான். அதற்கும் முன்பே, இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக் கட்சித் தலைவரான டி.எம்.நாயர் எடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் 1967-ம் ஆண்டு திமுக வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே-1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அண்ணா கொண்டுவந்தார். அதற்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி, மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கினார். அதைத்தொடர்ந்து, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, நம்முடைய மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்துக்கும் மே 1 தொழிலாளர் தினத்தை ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதையும் நிறைவேற்ற கருணாநிதி பாடுபட்டார். இந்த மேதின பூங்காவை உருவாக்கி, நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கருணாநிதிதான்.
திமுக ஆட்சியின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை, சாதனைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இதுவரை 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,461 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். உணவு மற்றும் பிற பொருள்களை டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கும், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்களுக்கும் தனி நலவாரியத்தை அமைத்திருக்கிறோம்.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளோம். 20 அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில், 2021-24 காலக்கட்டத்தில் 16 லட்சம் ஊழியர்கள் புதிதாகப் பதிவு செயதுள்ளனர்.
கார்ல் மார்க்ஸ் சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. இதன் மூலமாக, தொழிலாளர்களும் வளர்ந்து வருகின்றனர். தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எந்த முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், நான் முதலில் கேட்பது, ‘எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள்?’ என்றுதான். இது சாமானிய மக்களுக்கான, சாமானியர்களின் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். என்றைக்கும் உங்கள் கூட – உங்களுக்காக நிற்கும், உங்களில் ஒருவன்தான் நானும், நம்முடைய அரசும்.
இன்னும் ஒரு வாரத்தில், திமுக ஆட்சி உருவாகி, 4-வது ஆண்டை நிறைவு செய்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். எனவே, உங்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திமுக ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக, பக்கபலமாக இருக்க வேண்டும் . இவ்வாறு முதல்வர் பேசினார்.