சென்னையில் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது!

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா, இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இன்று பாஜக நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா.

இன்று காலை ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மையக் குழு கூட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, ராமலிங்கம், எஸ்.ஆர்.சேகர், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆவது, பூத் கமிட்டி மற்றும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, அதிமுக – பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை இணைப்பது என்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை பலமான கூட்டணியுடன் சந்திக்க திட்டமிட்டு வருகிறது பாஜக. அதற்காகவே அதிமுக உடன் அமித் ஷாவே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்துள்ளார். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க முயன்று வருகிறது பாஜக. அதுகுறித்த ஆலோசனைகளை இன்று ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைவர்களுக்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இன்று இரவு ஜே.பி.நட்டா மீண்டும் விமானம் மூலம் டெல்லி திரும்ப உள்ளார். கடந்த மாதம், பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் ஜே.பி. நட்டா.