இடஒதுக்கீட்டு கொள்கையின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி பொது மேலாளர் ஜீவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், “பாங்க் ஆப் பரோடா வங்கியில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஏராளமான ஊழியர்கள் சாதி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேருகிறார்கள். அவர்கள் தரும் சாதி சான்றிதழ்கள் பல போலியாக இருக்கின்றன. வங்கி ஊழியர்களின் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில அளவிலான ஆய்வுக்குழு உறுதி செய்ய வேண்டும். ஆனால் இந்த குழு குறித்து காலத்துக்குள் விசாரித்து, உறுதி செய்வது கிடையாது. இதன் காரணமாக, எங்கள் வங்கியின் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களை நிர்ணயிக்க முடியவில்லை. எனவே, சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய கால அளவை நிர்ணயித்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு பாங்க் ஆப் பரோடா வங்கியின் மேலாளர் ஜீவன் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், “மனுதாரரை பொறுத்தவரை, போலி சாதி சான்றிதழ் கொடுத்து இட ஒதுக்கீடு இடத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம் சாதி சான்றிதழின் உண்மை தன்மையை மாநில அளவிலான குழு உறுதி செய்வது இல்லை. அந்த விசாரணைக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களும் ஒத்துழைப்பது கிடையாது. இதனால் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டிருக்கிறது.
விசாரணையை முடிக்கும் காலத்தை நிர்ணயிக்க இந்த உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த வழக்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்திருக்கிறோம். இந்த வழக்கை பொறுத்தவரை, இடஒதுக்கீட்டு கொள்கையின் புனித்தன்மையையும், பொதுநலனையும் பாதுகாக்கும் விதமாக, போலி சாதி சான்றிதழ் குறித்த புகாரை குறித்து நேரத்தில் விரைவாக விசாரித்து முடிக்க மாநில ஆய்வுக்குழுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும்.
மேலும், போதுமான எண்ணிக்கையில் மாநில ஆய்வுக்குழுக்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்ல அனைத்து விதமான விசாரணைகளையும் தீவிரமாக மேற்கொண்டு, இறுதியில்தான் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதனால், இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவை 6 வாரத்துக்குள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்” இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.