உத்தரப் பிரதேச மாநிலம் சஜஹான்பூரில், கங்கை எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டிருப்பது இந்தியாவின் பலத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது.
சஜஹான்பூரில் தற்போது இந்திய விமானப்படையின் சார்பில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இது நடைபெறும் இடம் மீரட்டிலிருந்து பிரக்யாராஜ் வரை செல்லும் 594 கி.மீ தொலைவை இணைக்கும் கங்கை எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையாகும். இங்கு போர் விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் வசதி உள்ளது. அதாவது, இந்த எக்ஸ்பிரஸ்வேயின் 3.5 கி.மீ தொலைவுக்கு போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. போர் விமானங்கள் தரையிறங்கும் வசதியுடன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். குறிப்பாக இரவு நேரத்தில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதியுடன் அமைக்கப்பட்ட முதல் நெடுஞ்சாலை இதுவாகும். இதில்தான் தற்போது விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11.30 முதல் மதியம் 1 மணி வரை இந்த கண்காட்சி நடந்துள்ளது. அதேபோல இரவு 7 மணி முதல் 10 மணி வரையும் இந்த கண்காட்சி நடைபெற்றது.
இந்த நெடுஞ்சாலையில் மிக், ஜாகுவார், ரஃபேல், சுகோய் போன்ற விமானங்கள் தரையிறங்கியுள்ளன. தவிர C-130J Super Hercules, AN-32, MI-17 V5 போன்ற ஹெலிகாப்டர்களும் தரையிறங்கி, டேக்ஆப் ஆக இருக்கின்றன. இரவு நேரத்திலும் விமானங்கள் தரையிறங்க இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கண்காட்சி மற்ற நாடுகளை விட பாகிஸ்தானால் மிகுந்த கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
உ.பியில் இதுபோன்று மேலும் 3 நெடுஞ்சாலைகளில் விமானங்கள் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வே-யில் உள்ள உனாவ் பகுதி. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள சுல்தான்பூர் பகுதி, பந்தல்காந்த் எக்ஸ்பிரஸ்வேயின் சித்ரகூட் பகுதி ஆகியவற்றில் போர் விமானங்களால் தரையிறங்க முடியும். இந்தியா உலகின் மிகப்பெரிய விமானப்படையை கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து மூன்றாவது பெரிய விமானப்படை நம்மிடம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.