பிரதமர் மோடியுடன் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று சனிக்கிழமை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பகல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஏப். 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.