மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளதாவது:-
நீட் தேர்வில் வெற்றிபெற முடியுமா என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரை சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
2017-ம் ஆண்டில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும்தான் பேசுகிறது. நீட் தேர்வால் மருத்துவ கல்வியின் தரம் உயரவில்லை. மருத்துவ கல்வி வணிகமயமாவது குறையவில்லை. இதை தெரிந்தும் தேர்வை நடத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
