அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் பாஜக அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் காட்டியிருக்கிறது என அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ என்ற தலைப்பில் அரசியல் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மாநாட்டுக்கு தலைமை வகித்து, ‘இந்திய அரசியலமைப்பு’ புத்தகத்தை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வழங்கினார். ‘ஒருமித்த குரலோடு, ஒற்றுமையான கைகளோடு இந்திய தேசத்தை பாதுகாப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாநாட்டில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திட்டங்கள் மக்களுக்கானது. ஆனால் பாஜக கொண்டு வந்த திட்டங்கள் அம்பானிக்கும், அதானிக்குமானது. பாஜக ஆட்சியில் 50 சதவீதத்துக்கு மேல் தேசத்தில் ஒவ்வொரு குடிமகன் மீதும் கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமாகும். ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது. அங்கே தான் அம்பேத்கர் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியதாவது:-
நாட்டில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அமலாக்கத்துறையும், சிபிஐயும் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் பெரியளவில் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அங்கெல்லாம் அமலாக்கத்துறை செல்லாமல், தமிழகத்துக்கு வருகிறது. இதையெல்லாம் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்த ஆட்சியாளர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள். ஆளுநருக்கு எதிராக பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.