அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
“திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது” எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?
தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசியச் சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கடல்சார் தேசியப் பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி, நெசவாளர் சமுதாயத்தினர் நலனுக்காக சென்வாட் வரி நீக்கம், பொடா சட்டம் ரத்து, எனப் பத்தாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது.
பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? எனப் பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார். ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமி அரசு. ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்குச் சேவகம் செய்து, மாநில உரிமையைப் பறிகொடுத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், நீட் ஆகியவற்றை ஜெயலலிதா தீரத்தோடு எதிர்த்தார். அதனையெல்லாம் பழனிசாமியோ பயத்தோடு ஆதரித்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுகே வந்தார். பழனிசாமி அமித்ஷா வீட்டிலேயே தவம் கிடந்தார்.
நீட் தேர்வைத் திரும்பப் பெறத் தொடர் போராட்டம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல், காவிரி, மேக தாட்டு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடியது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துக்கு எதிர்ப்பு, மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்தது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எனத் தமிழ்நாட்டு உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.
இப்படி எதற்கும் குரல் கொடுக்காத பழனிசாமி, தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.
”அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது’ என்கிறார் பழனிசாமி. கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்ட போது பக்கத்தில் பொம்மையாக அமர்ந்திருந்த பழனிசாமி மகிழ்ச்சி பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கை. கூட்டணி மகிழ்ச்சி என்றால் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டியதுதானே! ஏன் செய்யவில்லை? ‘பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை’ எனப் பேசிய பச்சைப்பொய் பழனிசாமி எந்த வெட்கமும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பேசும் வீர வசனங்களைக் கோமாளியின் உளரல்களாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.
ஒன்றிய பாஜகவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜக ஆட்சிகள். இந்தத் துரோகக் கூட்டணிக்குக் கடந்த தேர்தல்களிலேயே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்துத் தக்கப் பதிலடி கொடுத்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சுயநலப் பச்சோந்திகளுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடமில்லை. பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியப் போவது உறுதி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.