பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது வயநாடு மக்களவை தொகுதிக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்காவிடம் பகல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறும்போது, “சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், பகல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு அளிப்பது என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.
முன்னதாக, வயநாடு தொகுதியில் உள்ள சுல்தான் பாதரி நகரில் உள்ள வனத்துறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வன விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை பிரியங்கா தொடங்கி வைத்தார். இதற்காக மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் வனத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, விலங்குகள் மருத்துவமனையை பிரியங்கா பார்வையிட்டார்.