மே 5-ஐ வணிகர் நாளாக அரசு விரைவில் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மதுராந்தகத்திற்குள் தமிழ்நாடே கூடியிருக்கிறதா? என்று வியப்படைகின்ற வகையில், இந்த மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!

நம்முடைய விக்கிரமராஜா பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இதுபோன்ற மாநாடுகளை மட்டுமல்ல, வணிகர்களுக்கான நலன்களையும் பிரமாண்டமாக செய்யக்கூடியவர். அவர் சொன்னார் நான் அவரிடத்தில் பாசத்தோடு, அன்போடு, உரிமையோடு இருப்பதுபோல் அவரும் அதே உணர்வோடு பழகுகிறார். இது உங்கள் மீது நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் என்று எடுத்துச் சொன்னார். உண்மைதான். அது ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள் மேல் அவர் வைத்திருக்கின்ற அக்கறையால்தான், அவர் மேல் நீங்கள் இந்தளவுக்கு அன்பையும், பாசத்தையும் பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவும் உண்மை.

உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னால், முதல் ஆளாக ஓடோடி வந்து நிற்பார்; உடனே, அந்தப் பிரச்சினையை என் கவனத்துக்குக் கொண்டு வந்துவிடுவார். அவருடைய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், அது எப்படிப்பட்ட கோரிக்கையாக இருந்தாலும் சரி. அதை சாதாரணமாக தான் சொல்வார். அதையும் அழுத்தம் கொடுத்து பிடிவாதமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வோடு சொல்லக்கூடிய அந்த ஆற்றலைப் பெற்றவர்.

எந்த கோரிக்கையாக இருந்தாலும், சிரித்த முகத்தோடு முதல்வரிடம் சொன்னால், எப்படி கன்வின்ஸ் செய்யலாம்; அதிகாரிகளிடத்தில் எப்படி பேசினால் அவர்களை சரி செய்யலாம் என்ற அந்த டெக்னிக்கை நன்றாக தெரிந்து வைத்திருக்கக் கூடியவர்தான் நம்முடைய விக்கிரமராஜா. அதேபோல், அவருக்குத் துணையாக நிற்கக்கூடிய தோளோடு தோள் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாநாட்டில் கூடியிருக்கின்ற உங்களுக்கும், ஏன் தமிழகத்தில் உள்ள அத்தனை வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் முதலில் என்னுடைய வணிகர் நாள் வாழ்த்துகளை நான் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் மே ஐந்தாம் நாளை வணிகர் நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் நான் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு வருகிறேன். பெரும்பாலும் நானும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன். இந்த அழைப்பிதழை வழங்கிய நேரத்தில் கூட நம்முடைய தலைவர் அவர்களும், நம்முடைய நிர்வாகிகளும் என்னிடத்தில் பல கோரிக்கைகளை வைத்தார்கள். இங்கேயும் வைத்தார்கள். இங்கே மேடையில் மட்டுமல்ல, கோட்டையில் மட்டுமல்ல, எப்போதும் பார்க்கின்ற போதெல்லாம் வைப்பார்கள். அதிலும் குறிப்பாக, என்னை கோட்டையில் வந்து சந்தித்து இந்த அழைப்பை வழங்கியபோது, மே 5-ஐ வணிகர் நாளாக அரசு அறிவிக்க வேண்டும், இது இப்போது மட்டுமல்ல, தொடர்ந்து நீங்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த கோரிக்கைக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால், இதுதான் பெரிய கோரிக்கையாக இருந்தது. மற்ற கோரிக்கைகள் எல்லாம் பெரிய கோரிக்கையாக இல்லையா? என்று கேட்டு விடாதீர்கள். அதுவும் கோரிக்கைகள் தான். ஆனால், இன்று மே 5-ஆம் தேதியாக இருக்கின்ற காரணத்தினால், அந்த நாளில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் மாநாடுபோல் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் முதல் அறிவிப்பாக இந்த அறிவிப்பை நான் வெளியிட்டிருக்கிறேன்.

வணிகர்களாக இருக்கக்கூடிய நீங்கள்தான், மக்களோடு மக்களாக, மக்களின் உள்ளத்தையும், உணர்வுகளையும் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு உறுதுணையாக நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் இருக்கும்; அதில் எந்தவித சந்தேகமும் நீங்கள் அடையவேண்டிய அவசியமில்லை. அது முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமாக இருந்தாலும் சரி, என்னுடைய காலமாக இருந்தாலும் சரி, அல்லது எனக்கு பிறகு வரக்கூடிய திராவிட இயக்கத்தை காப்பாற்றக்கூடிய யாராக இருந்தாலும், நிச்சயமாக திராவிட இயக்கம் ஒன்று இருக்கின்ற வரையில், வணிகர்களின் நலனைக் காக்கின்ற அரசாக, இயக்கமாக தான் இருக்கும்.

அதேபோல், நீங்களும் தொடர்ந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், வணிகர்களுக்கும் இடையில் இருக்கக்கூடிய இந்தப் பாச உணர்வுக்கு அடித்தளமிட்ட சாதனைகளைப் பட்டியலிட்டு சொல்லவேண்டும் என்று சொன்னால், இந்தியாவிலேயே முதன்முதலாக, 1989-ஆம் ஆண்டு தமிழகத்தில்தான் வணிகப் பெருமக்களுடைய நலனுக்காக “தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 35 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் அந்த அமைப்பை உருவாக்கியவர் தான் நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதை யாரும் மறந்திட முடியாது!

அப்படிப்பட்ட வணிகர் நல வாரியத்தை சீரமைத்து, உறுப்பினர் சேர்க்கையை செம்மைப்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக நாம் சொன்னோம்; சொன்னதை செய்திருக்கிறோம்! நம்முடைய திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் இந்த வாரியத்தில் இன்று வரை சேர்ந்திருக்கின்ற மொத்த உறுப்பினர்களுடைய எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 88 ஆயிரத்து 496. இந்த மாநாட்டிலும், உங்களுடைய கோரிக்கைகளை சிலவற்றை தீர்மானங்களாக இங்கே நிறைவேற்றியிருக்கிறார்கள். விக்கிரமராஜாவும் என்னிடத்தில் சில கோரிக்கைகளை எடுத்து வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில், சில அறிவிப்புகளை இந்த மாநாட்டின் வாயிலாக நான் வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு வணிகர் நாள் அன்று நான் சொன்னதை முதல் அறிப்பாக கருதவேண்டாம். அது சிறப்பு அறிவிப்பு. ஆனால், மற்ற அறிவிப்புடன் அதை சேர்த்துக் கொள்ளவில்லை.

முதல் அறிவிப்பு: வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து, நிரந்தர உறுப்பினராக இருக்கும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப உதவித்தொகையை, ஒரு லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக உயர்த்தி இருந்தோம். வருங்காலத்தில், இது ஐந்து லட்சமாக ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கை – கால நிர்ணயம் வழங்கியிருக்கிறீர்கள் – அதை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பு: உணவுப் பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்தல் தொழில்கள் தவிர்த்து, 500 சதுர அடிக்குக் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு, சுயசான்றிதழ் முறையில் இனி தொழில் உரிமம் வழங்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு: சென்னை மாநகராட்சி நீங்கலாக, மற்ற மாநகராட்சிகளில் இருக்கின்ற கடைகள், வணிக வளாகங்களின் பிரச்னைகளைத் தீர்க்க, வழிகாட்டு குழுக்கள் 2024-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதேபோல், சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு: 9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கும் ஒரு பெயர் பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

ஐந்தாவது அறிவிப்பு: தமிழக ஒற்றைச் சாளர இணையதளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதில் வர்த்தகங்கள், சிறு வியாபாரிகளுக்காக புதிய இணையம் அறிமுகப்படுத்தப்படும். இதில் வர்த்தக உரிமம், கடைகள், உணவகங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட 22 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையான அனுமதிகளை எளிதாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆறாவது அறிவிப்பு: பொதுமக்களின் நலன் கருதி அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசு ஆணை ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்.

மாநாட்டில் இங்கே பேசியிருக்கக்கூடிய நிர்வாகிகள் மற்றும் நம்முடைய சகோதரர் விக்கிரமராஜா அவர்கள் மேலும், மேலும் சில தீர்மானங்களை சொல்லியிருக்கிறார்கள். நிச்சயமாக, உறுதியாக எந்த நம்பிக்கையோடு, சொன்னீர்களோ, அந்த நம்பிக்கையோடு இருங்கள். அந்த நம்பிக்கைக்குரியவன் நான். உறுதியாக சொல்கிறேன். எல்லாவற்றையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை படிப்படியாக எடுக்கப்படும் என்பதை நான் மிகத் தெளிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.