தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் பண்டிகைக்கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர், உள்ளாட்சி பணியாளர்கள் ஆகியோருக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. முன்பணம் பெறுவதற்கு அனுமதி வழங்கும் முறையிலும், அதை திரும்ப பெறும் நடைமுறையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.