பகல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி குடும்பத்துக்கு ராகுல் ஆறுதல்!

பகல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வால் குடும்பத்தினரை நேற்று சந்தித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஹரியானாவின் கர்னலைச் சேர்ந்த வினய் நர்வாலும் ஒருவர். கடற்படை அதிகாரியான இவருக்கு ஏப்ரல் 16-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் 22-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, வினய் நர்வாலின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, நர்வால் குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் நயாப் சைனியின் மனைவி சுமன் சைனி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்த நாள் மிகவும் சோகமானது. அன்பான மகனை குடும்பத்தினர் இழந்துள்ளனர். இதை தாங்கி கொள்ளும் மன வலிமையை அவர்களுக்கு கடவுள் அருள வேண்டுகிறேன். ஏப்ரல் 22 தாக்குதல் கண்டனங்களுக்கும் அப்பாற்பட்டது. வினய் நர்வாலின் இழப்பால் நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது” என்றார்.

தீவிரவாத தாக்குதலில் பலியான வினய் நர்வால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை அறிவித்துள்ள ஹரியானா முதல்வர் நயாப் சிங், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.