கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காம் அருகே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் அனைத்து உயிரிழப்புகளும் நிகழ்ந்திருப்பதாகவும், காயமடைந்த 59 பேரில் 44 பேர் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் தொடக்கம் வரை பாகிஸ்தான் துருப்புக்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சுமார் 15 முறை மீறியுள்ளன. கடந்த மாதம் முதல் சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. புதன்கிழமை நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இது குறித்து நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தாக்குதல்களை நடத்தி வருகிறது.