பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவன் கண்ணீருடன் முன்வைத்த கோரிக்கையை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி” என ஆறுதல் கூறி, மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லியிருப்பதாக பதில் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நெடுமருதி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி வர்மா. பிறவியிலேயே கைகள் இல்லாத இவர் கல்வி கற்பதில் காட்டிய அக்கறையை கண்டு அவரை அவரது தாயார் படிக்க வைத்து வருகிறார். கீர்த்தி வர்மா சிறுவயதாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டதால் கூலி வேலைக்குச் செல்லும் தாயார் தான் படிக்க வைத்து வருகிறார். குடும்பத்தில் வாட்டி வதைக்கும் கஷ்டம், எல்லா மாணவர்களையும் போல் எழுத முடியாத சூழல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் படிப்பை மட்டும் கீர்த்தி வர்மா கைவிடவேயில்லை. இவரது ஆற்றலை கண்டு ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமும் அவரை தொடர்ந்து சிறப்பாக படிக்க வைத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்தார் கீர்த்தி வர்மா.

இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி இருந்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 600க்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் கீர்த்தி வர்மா. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி வர்மா, “நான் பொறியியல் படிக்க ஆசைப்படுகிறேன். அதன் பிறகு நல்ல வேலைக்குச் செல்லவேண்டும். எனக்கு 2 கைகளும் இல்லாததால் என்னால் வேலை செய்ய முடியாது. என்னால் யார் உதவியும் இல்லாமல் வாழவே முடியாது. முதலமைச்சர் எனக்கு உதவி செய்தால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும். எங்களுக்கு சொத்து, வீடு என எதுவும் இல்லை. எனக்கு அம்மா மட்டும் தான் இருக்கிறார். அவர் வேலை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறார். எனக்கு கை இருந்தால் மட்டும் தான் அம்மாவை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவினால் தான் நான் படித்து வேலைக்குச் செல்ல முடியும். என்னைப் போல இருக்கும் நிறைய பேருக்கு நான் உதவுவேன்” என கண்ணீருடன் பேசியுள்ளார்.

இந்த வீடியோ பரவிய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.