பதற்றத்தை அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது: ஜெய்சங்கர்!

“பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால். பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். இந்நிலையில், இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியா – ஈரான் இடையிலான 20-வது கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி நேற்று இரவு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். 2024-ல் ஈரான் வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இது முதல் முறை ஆகும்.

மேலும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி உடனான சந்திப்புக்கு பிறகு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. அதேநேரத்தில், பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அண்டை நாடு மற்றும் நெருங்கிய உறவினர் என்ற காரணத்தால், இச்சூழ்நிலையை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள முடியும்” என்றார்.