‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக நாடுகளிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று விளக்கம் அளித்தார்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ, இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பவல், சவுதி அரேபியா பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பன், ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் மசாடாகா ஒகானா ஆகியோரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று போனில் பேசினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குல் நடத்தியது குறித்து விளக்கினார். அப்போது, ‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை எனவும், ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால் மீ்ண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
இதேபோல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கத்தார் பிரதமர் ஷேக் முகமதுவை தொடர்பு கொண்டு, எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.