ராணுவத்துக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரஸ் தேசியக் கொடி ஊர்வலம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் தேசியக் கொடி யாத்திரை நடத்தப்பட்டது.

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துக்கு அருகிலுள்ள கே.ஆர். சர்க்கிளில் இருந்து மின்ஸ்க் சதுக்கம் வரை இந்த தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தின்போது, நாட்டுக்கு ஆதரவான கோஷங்களும், பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவான கோஷங்களும் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், “சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் நாங்கள் அழைத்துள்ளோம். நமது ஆயுதப் படைகளுக்கு வணக்கம் செலுத்தவும், நாட்டோடு ஒற்றுமையாக நிற்கவும் விரும்புகிறோம். ஓய்வுபெற்ற ஆயுதப் படைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான மக்கள் இதில் பங்கேற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை ஆதரிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை” என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா பேசும்போது, “நாங்கள் அனைவரும் உங்களுடன் (இந்திய ஆயுதப் படைகளுடன்) இருக்கிறோம் என்ற செய்தியை அனுப்ப விரும்புகிறோம். நீங்கள் எந்த நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது பாராட்டத்தக்கது. அதை அடையாளமாகச் சொல்வதற்காக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

இந்தியாவுக்குமு் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.