‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள இந்திய அரசு, பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் மென்மேலும் முயற்சி செய்தால், அதற்கு களத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பகல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்தது. இதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லை கிராமத்தினர் மீது தாக்குதல், இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதும், இவற்றுக்கு இந்திய ராணுவ தரப்பில் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வரும் சூழலில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்தப் போர் மேகம் சூழ்ந்த பதற்றத்தையொட்டி இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன. ஒரே இரவில் இந்தியாவின் 25 ட்ரோன்களை தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், இந்தியாவின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் அனுப்பியதாக இந்தியா கூறுவது பற்றி பாகிஸ்தான் தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் புதன்கிழமை காலையில் இருந்து எல்லைக் கட்டுப்பாடு கோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை பொதுமக்களில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனிடையே, காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில், இந்தியா தரப்பின் விளக்கத்தை அளிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் பகல்காம் தாக்குதல் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது டிஆர்எஃப் (The Resistance Front)-ன் பங்கினை மறுத்துப் பேசியது பாகிஸ்தான். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இரண்டு முறை டிஆர்எஃப் ஏற்றுக்கொண்ட பின்னரும் பாகிஸ்தான் இவ்வாறு செய்துள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கான இந்தியாவின் பதிலடி என்பது தீவிரமில்லாதது, துல்லியமானது, அளவிடப்பட்டது என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டது. பதற்றத்தைத் தீவிரப்படுத்துவது இந்தியாவின் நோக்கம் அல்ல. எந்த ராணுவ இலக்குகளும் தாக்கப்படவில்லை. பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மட்டுமே தாக்கப்பட்டன.
சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்துவருவது பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் கடைசியாக எங்கு கண்டுபிடிக்கப்பட்டார், அவரை யார் தியாகி என்று அழைத்தார்கள் என்று உங்களுக்கு நான் நினைவூட்ட வேண்டியதில்லை. ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட, சர்வதேச நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு வீடாகவே பாகிஸ்தான் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக அவர்களின் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பயங்கரவாதக் குழுக்களுடன் அவர்களின் நாட்டுக்கு இருக்கும் தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பொது மக்களின் இறுதிச்சடங்கில் சவப்பெட்டிகளில் தேசியக்கொடி போர்த்தப்படுவதும், அரசு மரியாதை செலுத்தப்படுவதும் விந்தையாக இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் மட்டுமே. பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை வழங்கப்படுவது பாகிஸ்தானில் நடைமுறையாக இருக்கலாம். நமக்கு அது தெரியவில்லை.
பாகிஸ்தான் நேற்று சீக்கிய சமூகத்தவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு குருத்வார் மீது தாக்கியது. இந்தத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பூஞ்ச் மாவட்டத்தில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்திய ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக பாகிஸ்தான் பரப்புரை செய்கிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அந்த நாடு உருவானதில் இருந்தே பொய் பேசி வருகிறது.
இன்றைய நடவடிக்கைகள் உட்பட இனி பாகிஸ்தானின் எந்த ஒரு நடவடிக்கையும் பிரச்சினையை தீவிரப்படுத்துவதாகவே பார்க்கப்படும். அதற்கு தகுந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் – ஜீலம் அணையை நாம் குறிவைத்திருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இது அத்தனையும் ஜோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய்.
பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை குறிவைத்து இந்தியா தாக்குகிறது. பாகிஸ்தான் சொல்லும் பொய்க் கூற்றுகள், இந்தியாவில் உள்ள அணைகளை குறிவைத்து தாக்குவதற்கான சாக்காக இருக்கலாம். அப்படி இருந்தால், அதற்குப் பின்பு வரும் பின்விளைவுகளுக்கு பாகிஸ்தானே முழு பொறுப்பாகும். பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் மேலும் முயற்சி செய்தால், அதற்கு களத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி கூறினார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு ட்ரோன், ஏவுகணை தாக்குதல் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் தரப்பில் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில், ‘மே 7-ல் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்று இந்தியா தனது பதிலை விளக்கமாக எடுத்துரைத்துள்ளது. இந்திய ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்படும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
மே 7 – மே 8 இரவு பாகிஸ்தான், வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க பாகிஸ்தான் முயன்றது. ஒருங்கிணைந்த எதிர் தடுப்பு அமைப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இவை தடுக்கப்பட்டன.
பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபிக்கும் இந்தத் தாக்குதல்களின் சிதைவுகள் தற்போது பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் உள்ள வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. பாகிஸ்தானைப் போலவே இந்தியா களத்தில் பதிலடி அளித்தது. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான், மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே தூண்டப்படாத துப்பாக்கிச் சூட்டை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக 3 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இங்கும், பாகிஸ்தானின் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தும் வரை, பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் 100-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். முப்படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னும் முடியவடையவில்லை. இது தொடர்கிறது” என்றார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் அடங்கிய உயர் நிலைக் கூட்டம் நடந்தது. அதில், தயார்நிலை, அவசரகால பதில் நடவடிக்கைகள், உள் தொடர்பு நெறிமுறைகளில் சிறப்பு கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அந்தந்த அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், அத்தியாவசிய அமைப்புகளின் விரைந்த செயல்பாட்டை உறுதி செய்யவும் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.