‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்: சென்னையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு!

`ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் காஷ்மீரின் பகல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் `ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் 200 இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு, பல்வேறு பகுதிகளில் போர் ஒத்திகை நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு கல்பாக்கம் அணுமின் நிலையம், துறைமுகத்தில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அண்ணாசாலை, ஈவெரா பெரியார் சாலை, காமராஜர் சாலை, வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், முக்கிய கோயில்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாத தாக்குதலின்போது பயணிகளை எவ்வாறு மீட்பது? தாக்குதலின்போது அவசர நிலையில் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்துவது, அபாய ஒலி எழுப்புவது, முதலுதவி செய்வது, பயணிகள் தங்களை தாங்களாகவே எவ்வாறு பாதுகாத்து கொள்வது? உள்ளிட்டவை குறித்து தன்னார்வலர்களை வைத்து ஒத்திகையில் அதிகாரிகள் தத்ரூபமாக செய்து காட்டினர்.

அதேபோல் மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலும் எதிரிகளின் தாக்குதல் மற்றும் அவசரகால சூழலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது ஒத்திகையை ஒருங்கிணைக்கும் மாவட்ட அதிகாரிகள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர், காவல் துறையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை ஆகியோர் பங்கேற்றனர்.