சண்டிகரில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதியில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரையிலான தாக்குதல்களில் இந்தியாவின் கையே ஓங்கி இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானில் 9 இடங்களில் 24 ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. தொடர்ந்து, மிக முக்கிய நடவடிக்கையாக லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்துள்ளது. அதோடு, பாகிஸ்தானின் விமானப் படை தாக்குதல் முயற்சிகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து முறியடித்து வருகின்றன. பலத்த சேதத்துக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், இந்தியா உறுதியான பதிலடியை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்று (மே 9) காலை 9:30 மணியளவில் சண்டிகரில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், பால்கனிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக சண்டிகர் துணை ஆணையர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வியாழக்கிழமை (மே 8, 2025) இரவு சண்டிகரிலும், பதான்கோட், அமிர்தசரஸ், ஜலந்தர், ரூப்நகர், ஃபாசில்கா, லூதியானா, ஹோஷியார்பூர் மற்றும் சாஹிப்சாடா அஜித் சிங் நகர் உள்ளிட்ட பஞ்சாபின் பல மாவட்டங்களிலும் மின்தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் தாக்குதல்கள் தொடர்வதால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவை தொடர்ந்து எச்சரிக்கை நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் உள்ள அரசு ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, பணியாளர்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு முழுமையாக மூடப்படும் என்று பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பெய்ன்ஸ் தெரிவித்தார்.