கேரளாவில் பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு!

கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இதன்பிறகு கடந்த 2019, 2021, 2024-ம் ஆண்டுகளில் இதே பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் தென்பட்டன. அப்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்த சூழலில் கேரளாவின் மலப்புரம் மாவட்டம், வளஞ்சேரியை சேர்ந்த 42 வயதான பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வளஞ்சேரி முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.