முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் பேரணியை நடத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் நடத்தியது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. அதனை இந்திய ராணுவம் தடுத்து வான் பரப்பிலேயே தாக்கி அழித்தது.

இத்தகைய சூழலில் தான் இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் திமுக கூட்டணிக் கட்சிகள், காவல்துறை, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் இந்த பேரணியை நடத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார். இது தொடராக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.